கலை, பண்பாட்டுத்துறை சார்பில் 93 தமிழறிஞர், எழுத்தாளர்களுக்கு இலக்கிய விருது
|புதுவையில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் 93 பேருக்கு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி
புதுவையில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் 93 பேருக்கு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் சந்திரபிரியங்கா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இலக்கிய விருதுகள்
தமிழ் இலக்கியங்கள் உலக அளவில் போற்றப்பட வேண்டும். மேலும் இலக்கிய புத்தகங்கள் மிகுதியாக வெளியிடப்பட வேண்டும் என்ற கொள்கையுடனும், புதுவையில் இலக்கிய படைப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், இளம் படைப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையுடனும் புதுவை அரசு கம்பன் புகழ் இலக்கிய விருது, நேரு குழந்தைகள் இலக்கிய விருது, மற்றும் தொல்காப்பியர் விருது என்னும் இலக்கிய விருதுகள் கலை பண்பாட்டுத்துறை வாயிலாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதுகள் அனைத்தும் ரூ.10 ஆயிரம் பணமுடிப்பும், சான்றிதழும் கொண்டதாகும்.
நாளை வழங்கப்படுகிறது
அதன்படி, 2015 முதல் 2022-ம் ஆண்டு வரை கம்பன் புகழ் இலக்கிய விருதுகள் 53 பேருக்கும், 2014 முதல் 2022 வரை நேரு குழந்தைகள் விருதுகள் 18 பேருக்கும், 2010 முதல் 2022 வரை தொல்காப்பியர் விருதுகள் 22 பேருக்கும் என ஒட்டுமொத்தமாக 93 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளை நாளை (வியாழக்கிழமை) பிற்பகலில் கம்பன் கலையரங்கில் நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்குகிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.