விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையில் உள்ள மதுக்கடைகள் மூடல்
|விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் பாதையில் உள்ள மதுபான கடைகளை மூட கலால்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி
விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் பாதையில் உள்ள மதுபான கடைகளை மூட கலால்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுவை நகரப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை மற்றும் இந்து முன்னணி சார்பில் 150 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மேலும் நகரப்பகுதியில் உள்ள கோவில்கள், குடியிருப்போர் நல்வாழ்வு சங்கங்கள், ஆட்டோ ஸ்டாண்டுகள் சார்பில் ஏராளமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சிலைகள் வரும் (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் ஊர்வலமாக எடுத்துச்சென்று புதுவை கடலில் கரைக்கப்பட உள்ளது.
கடலில் கரைப்பு
நகரப்பகுதியில் உள்ள சிலைகள் அனைத்தும் சாரம் அவ்வை திடலுக்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலம் தொடங்குகிறது. காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி, பட்டேல் சாலை வழியாக கடற்கரை சாலைக்கு சிலைகள் எடுத்து வரப்படுகின்றன. அங்கு கிரேன் மூலம் கடலில் சிலைகள் இறக்கப்பட்டு கரைக்கப்படுகின்றன.
விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பிரச்சினைகள் ஏதும் ஏற்படாத வகையில் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகிகளும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
மதுக்கடைகள் மூடல்
இந்தநிலையில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையான காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி, பட்டேல் சாலையில் உள்ள மது பார்கள், மதுபானம், கள், சாராய கடைகளை அன்றைய தினம் காலை 8 மணி முதல் மூடவேண்டும் என்று கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.
கலால்துறை பறக்கும் படை தாசில்தார் காவல்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.