ராஜீவ்காந்தி சிலைக்கு தலைவர்கள் மரியாதை
|ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்பட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
புதுச்சேரி
ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்பட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நினைவு தினம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு நாள் புதுவை அரசு சார்பில் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி 100 அடி சாலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை மற்றும் பாரதியார் பல்கலைக்கூட மாணவிகளின் தேசபக்தி பாடல்கள் இடம்பெற்றன. அதன்பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் வன்முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியினர் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீல.கங்காதரன், அனந்தராமன், நிர்வாகிகள் தேவதாஸ், தனுசு, எஸ்.எம்.ஏ. கருணாநிதி, இளையராஜா, வக்கீல் மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிலைக்கு மாலை அணிவித்து முடிந்ததும் பஸ்கள் மூலம் ஸ்ரீபெரும்புதூருக்கு சென்று ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் சந்திரபிரியங்கா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் மற்றும் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைதொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளில், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமையில் ராஜீவ்காந்தி புகைப்படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினர்.