எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. மீது வழக்கு
|நிலப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி
நிலப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலப்பிரச்சினை
புதுவை வெள்ளாளர் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 56). இவர் ரங்கப்பிள்ளை வீதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். அந்த இடத்தை அம்பிகா என்பவர், அவருக்கு உயில் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே அந்த இடத்தை சிவா எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினர் விலைக்கு வாங்கியதாக தெரிகிறது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
மிரட்டல்
இந்தநிலையில் சிவா எம்.எல்.ஏ. மற்றும் ஜெரால்டு உள்ளிட்ட சிலர் சேர்ந்து அபகரிக்கும் எண்ணத்துடன் அத்துமீறி நுழைந்து தடுப்புகளை சேதப்படுத்தியும், மிரட்டல் விடுத்து பொருட்களையும் எடுத்து சென்றனராம். இதுதொடர்பாக கணேசன் கடந்த 2014-ம் ஆண்டே பெரியகடை போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்தநிலையில் மீண்டும் கடந்த 2019-ம் ஆண்டு சிவா எம்.எல்.ஏ. அடியாட்களுடன் வந்து மிரட்டல் விடுத்து கடையின் நுழைவுவாயிலை தகரத்தினை கொண்டு அடைத்து தொழில் செய்ய விடாமல் தடுத்தாராம்.
இதுதொடர்பாக பெரியகடை போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
5 பிரிவுகளில் வழக்கு
இதைத்தொடர்ந்து கணேசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்பேரில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சிவா எம்.எல்.ஏ., ஜெரால்டு மற்றும் சிலர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.