சலவைத்துறை அமைத்து தர வேண்டும்
|மணவெளி, வில்லியனூர் தொகுதிகளில் சலவைத்துறை அமைத்து தர வேண்டும் என ரஜகுலத்தோர் நல சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புதுச்சேரி
புதுச்சேரி பிரதேச ரஜகுலத்தோர் நல சங்க மாநில தலைவர் ஆறுமுகம், செயலாளர் பலராமன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி பிரதேசத்தில் எத்தனையோ சாதிகள் குலத்தாலும், பொருளாதாரத்தாலும், கல்வியாலும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை நாங்கள் குலத்தாலும், பொருளாதாரத்திலும், கல்வியிலும் பின்தங்கியே வாழ்ந்து வருகிறோம். எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். புதுச்சேரி அரசு கடந்த 1995-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் வண்ணார் இன மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட கொண்டு வந்த தீர்மானத்தின் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்ணார் என்ற சாதி பெயரை ரஜகுலம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து 5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். மணவெளி தொகுதி, வில்லியனூர் தொகுதிகளில் சலவைத்துறை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்ய வேண்டும். சலவைத்துறைகளின் வாடகை, மின் கட்டணத்தை தள்ளுபடி செய்து இலவசமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.