ஆடிட்டரிடம் மடிக்கணினி, செல்போன் திருட்டு
|புதுவை பஸ் நிலையத்தில் ஆடிட்டரிடம் மடிக்கணினி, செல்போனை திருடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 27). ஆடிட்டர். இவர் இன்று காலை புதுவைக்கு பஸ்சில் வந்தார். பின்னர் அங்குள்ள ஒரு கடையின் முன்பு தனது கைப்பையை வைத்து விட்டு கடையில் இருந்தவரிடம் அதனை பார்த்துக்கொள்ளும்படி கூறி விட்டு கழிவறைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அவரது கைப்பையை காணவில்லை. அதில் ஒரு லேப்டாப், செல்போன் இருந்தது. இதுகுறித்து அவர் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கார்த்திகேயனின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த செல்போன் எண் மறைமலையடிகள் சாலையில் செயல்பாட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த செல்போன் வைத்திருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், அசாம் மாநிலம் பலுகடா கிராமத்தை சேர்ந்த ராஜூசவுத்ரி (28) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து மடிக்கணினி, செல்போன் அடங்கிய பையை பறிமுதல் செய்தனர்.