கடத்தப்பட்ட ஆண் குழந்தை 9 நாட்களுக்கு பிறகு மீட்பு
|புதுச்சேரியில் தாயுடன் பிளாட்பாரத்தில் படுத்திருந்தபோது மர்மஆசாமிகளால் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை 9 நாட்களுக்கு பிறகு போலீசார் பத்திரமாக மீட்டனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் தாயுடன் பிளாட்பாரத்தில் படுத்திருந்தபோது மர்மஆசாமிகளால் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை 9 நாட்களுக்கு பிறகு போலீசார் பத்திரமாக மீட்டனர்.
குழந்தை கடத்தல்
புதுவை உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் வீரபிரதாப். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு லட்சயா (வயது 3) என்ற பெண் குழந்தையும், ஆதித்யா என்ற 3 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
சோனியா புதுவை கடற்கரையில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 27-ந் தேதி இரவில் வியாபாரத்தை முடித்த விட்டு மிஷன் வீதிக்கு நடந்து வந்துள்ளார்.
அங்கு ஒரு கடையின் முன்பு பிளாட்பாரத்தில் அமர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். பின்னர் அசதியில் அவர் குழந்தைகளுடன் பிளாட்பாரத்திலேயே தூங்கிவிட்டார். நள்ளிரவு திடீரென்று கண்விழித்து பார்த்த போது குழந்தை ஆதித்யாவை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ குழந்தையை கடத்தி சென்று விட்டனர்.
போலீசார் மீட்டனர்
இது குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் சோனியா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்து, குழந்தையை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அந்த குழந்தையை அவரது உறவினர்கள் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து கடத்தி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து நேற்று குழந்தையை பத்திரமாக போலீசார் மீட்டனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை ஆதித்யா 9 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு இருப்பது அவரது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.