சிறுவனை கடத்தி நாடகமாடிய பட்டதாரி வாலிபருக்கு ஆயுள் தண்டனை
|திருக்கனூரில் சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயன்ற பட்டதாரி வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
திருக்கனூர்
திருக்கனூரில் சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயன்ற பட்டதாரி வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பட்டதாரி வாலிபர்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மூங்கில்பட்டு புளியந்தோப்பு வீதியை சேர்ந்த செல்வம் மகன் உதயன் (வயது 22). பட்டப்படிப்பு படித்துள்ளார். இவரது எதிர்வீட்டில் அன்பு- சக்திகலா தம்பதியினர் ஒரு மகன், மகளுடன் வசித்து வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சக்திகலாவின் வீட்டுக்கு சென்ற உதயன், அருகில் உள்ள புதுவை பகுதியான திருக்கனூர் கடைவீதிக்கு பொருட்கள் வாங்க செல்வதாகவும், தங்களுக்கு ஏதேனும் பொருட்கள் வாங்க வேண்டுமா? என கேட்டுள்ளார்.
அப்போது சக்திகலா, திருக்கனூர் கடைவீதியில் உள்ள ஒரு ஷோரூமில் புதிதாக டி.வி. வாங்கியதாகவும், அதற்குரிய பில் தரவில்லை, அதனை வாங்கி வருமாறும் கூறியுள்ளார்.
சிறுவன் கடத்தல்
அப்போது சக்திகலாவின் மகன் ரித்திசை (6) உதயன் மோட்டார் சைக்கிளில் தன்னுடன் அழைத்துச்சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த உதயன், சக்திகலாவிடம் திருக்கனூர் அய்யனார் கோவில் அருகே வந்தபோது தன்னை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கி விட்டு, சிறுவன் ரித்திசை கடத்திச்சென்று விட்டதாகவும், 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் சிறுவனை விட்டு விடுவதாக அந்த கும்பல் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திகலா, மகன் கடத்தப்பட்டது குறித்து திருக்கனூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சிறுவனை உதயன் கடத்திச்சென்று திருக்கனூரில் உள்ள தனது நண்பர் வீட்டில் மறைத்து வைத்திருந்தும், பணத்துக்காக கடத்தல் நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் மீட்டு, உதயனை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி செல்வநாதன் குற்றம்சாட்டப்பட்ட உதயனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி வாதாடினார்.