கணித விரிவுரையாளர்களுக்கு பணி இடமாறுதல் கலந்தாய்வு
|புதுவையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் கணித விரிவுரையாளர்களுக்கு பணி இடமாறுதல் கலந்தாய்வு இன்று நடந்தது.
புதுச்சேரி
புதுச்சேரி அரசு கல்வித்துறையில் பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிடமாறுதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான கலந்தாய்வு கடந்த 10-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பணிமூப்பு பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து முதல் கட்டமாக கணித விரிவுரையாளர்களுக்கான கலந்தாய்வு இன்று கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. இந்த கலந்தாய்வு பணிமூப்பு அடிப்படையில் நடந்தது. இதில் கணித ஆசிரியர்கள் 38 பேர் கலந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான பள்ளிகளை தேர்வு செய்தனர். இதேபோல் தாவரவியல், அரபிக், பிரெஞ்சு, புவி அறிவியல், இந்தி, வரலாறு, குடும்ப அறிவியல், மலையாளம், அரசியல் வரலாறு ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு புதுச்சேரியில் பள்ளி கல்வித்துறை வளாகம், காரைக்கால் மற்றும் மாகி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், ஏனாம் கல்வித்துறை அலுவலகங்களில் நடக்கிறது. இதற்கான உத்தரவை கல்வித்துறையின் துணை இயக்குனர் (நிர்வாகம்) வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.