ஜார்க்கண்ட் அணி சாம்பியன்
|கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி சார்பில் நடந்த ஆண்களுக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜார்க்கண்ட் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
புதுச்சேரி
கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி சார்பில் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி துத்திப்பட்டு கேப் சீகம் மைதானத்தில் கடந்த 18-ந் தேதி தொடங்கியது. இதில் புதுச்சேரி, கேரளா, திரிபுரா, சத்தீஸ்கர், வங்காளம், மராட்டியம் விதர்பா, ஜார்க்கண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகளின் முடிவில் மராட்டியம் விதர்பா-ஜார்க்கண்ட் அணிகள் இறுதிபோட்டிக்கு தகுதிப்பெற்றன.
முதலில் ஆடிய ஜார்க்கண்ட் அணி 50 ஓவர்களில் 242 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய மராட்டியம் விதர்பா அணி 45.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஜார்க்கண்ட் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து பரிசளிப்பு நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி நிறுவனர் பத்மா தாமோதரன், கவுரவ செயலாளர் ராமதாஸ், இணை செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜார்க்கண்ட் அணிக்கு பரிசு, கோப்பையை வழங்கினர்.