ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு மதிய உணவு
|புதுவையில் ஐ.டி.ஐ. மாணவர்ளுக்கும் மதிய உணவு வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி
ஐ.டி.ஐ. மாணவர்ளுக்கும் மதிய உணவு வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
மதிய உணவு
புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது. இதேபோல் ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
இது தொடர்பாக கோப்புகள் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனுமதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கவர்னர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கவர்னர் ஒப்புதல்
புதுச்சேரி அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் (ஐ.டி.ஐ.) மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்துக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் 638 மாணவர்களுக்கு அட்சய பாத்திரம் பவுண்டேசன் மூலமாகவும், காரைக்காலில் 460 மாணவர்கள், மாகியில் 77 மாணவர்கள், ஏனாமில் 99 மாணவர்களுக்கு கல்வித்துறையின் மத்திய சமையல் கூடங்களில் இருந்தும் மதிய உணவு வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 1,274 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.