ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் அதிரடி கைது
|திருக்கனூர் அருகே தாய், மகளை சுத்தியலால் தாக்கி கொள்ளை அடிக்க முயன்ற வழக்கில் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
திருக்கனூர்
திருக்கனூர் அருகே தாய், மகளை சுத்தியலால் தாக்கி கொள்ளை அடிக்க முயன்ற வழக்கில் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தாய், மகள் மீது தாக்குதல்
திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்த கலிவரதன், விவசாயி. இவர் கடந்த 27-ந் தேதி வெளியே சென்றிருந்த நியைில் மனைவி தமிழரசி (வயது 43) மற்றும் மகள் ஆகியோர் மட்டும் தனியாக இருந்தனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவர், திடீரென்று கலிவரதன் வீட்டுக்குள் புகுந்து திருடி முயன்றார். அவரை தடுக்க முயன்ற தமிழரசி மற்றும் மகளை சுத்தியலால் தாக்கிவிட்டு மர்ம ஆசாமி தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த தாய், மகள் இருவரும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
திருட்டு மோட்டார் சைக்கிள்
இது தொடர்பாக திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மஆசாமி விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிள் முத்தியால்பேட்டையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும், அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் திருட்டு போனதும் தெரியவந்தது.
ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர்
இதையடுத்து மோட்டார் சைக்கிள் திருட்டு போன பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த நபர், தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜா (35) என்பதும், அவர் புதுச்சேரி காவல்துறையில் 2005-ம் ஆண்டு ஐ.ஆர்.பி.என். போலீசாக பணியில் சேர்ந்ததும் தெரியவந்தது. இவர் கடலூரில் ஒரு பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.
சூதாட்ட பழக்கத்துக்கு அடிமையான ராஜா, பணம் இல்லாததால் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த தாய், மகளை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். புதுவையில் வேறு எங்கேயாவது கைவரிசை காட்டியுள்ளாரா? என்று அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.