< Back
புதுச்சேரி
கடற்கரையில் அமைச்சர், அதிகாரிகளுடன் ஆய்வு
புதுச்சேரி

கடற்கரையில் அமைச்சர், அதிகாரிகளுடன் ஆய்வு

தினத்தந்தி
|
16 Jun 2023 11:54 PM IST

புதுச்சேரியில் கடல் அரிப்பை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் சுற்றுச்சூழல், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள்.

புதுச்சேரி

புதுச்சேரியில் கடல் அரிப்பை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் சுற்றுச்சூழல், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள்.

கடல் அரிப்பு

புதுச்சேரி கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்கசெயற்கை மணல் பரப்பை உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில் தூர் வாரி கடற்கரையில் கொட்டப்படும் மணல், கடல் அரிப்பால் மீண்டும் கடலுக்கு செல்லாமல் இருப்பதை தடுப்பதற்காக ரூ.25 கோடியில் கடலுக்கு அடியில் நவீன தொழில்நுட்ப ரீதியில் தடுப்பு சுவர் போன்ற கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளால் தலைமை செயலகம் முதல் பாண்டி மெரினா வரை செயற்கை மணல் பரப்பு உருவாகி இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக புதுவை பழைய துறைமுகம் பாலம் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இது தொடர்ந்து டூப்ளக்ஸ் சிலை வரை கடல் அரிப்பை உருவாக்கி உள்ளது. இதனால் செயற்கை மணல் பரப்புகள் கரைந்து கருங்கற்கள் வெளியே தெரிகின்றன. இந்த கடல் அரிப்பு நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது.

அமைச்சர் ஆய்வு

இந்த நிலையில் கடல் அரிப்பை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அறிவியல் சுற்றுச்சூழல் துறை பொறியாளர் காளமேகம், விஞ்ஞானி விப்பின்பாபு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் மதிவாணன், ரங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

நிரந்தர தீர்வு

அதன்பின் அமைச்சர் லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் கூறுகையில், 'புதுச்சேரி அரசு, மத்திய அரசுடன் இணைந்து கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் காற்றின் திசை மாறும்போது கடல் அரிப்பு ஏற்படுவது வழக்கம். இதுகுறித்து ஆய்வு நடத்த மத்திய அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதுவை அரசு சார்பில் இடைக்காலமாக பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க ரூ.40 லட்சம் செலவில் கருங்கற்கள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடற்கரையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதுவை பழைய துறைமுக பாலத்தை இடித்துவிட்டு எதிர்காலத்தில் பயணிகள், சரக்கு கப்பல் வந்து செல்லும் வகையில் புதிய பாலத்தை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

மேலும் செய்திகள்