< Back
புதுச்சேரி
ஏனாம், மாகியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
புதுச்சேரி

ஏனாம், மாகியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
15 Aug 2023 7:03 PM IST

புதுச்சேரி

ஏனாம், மாகியில் நடந்த சுதந்திர தின விழாவில் அமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

என்.ஆர்.காங்கிரஸ்

77-வது சுதந்திர தினம் புதுவையில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமி கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் நமச்சிவாயம் தனது வீட்டு முன்பு தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

ஏனாம், மாகி

ஏனாமில் நடந்த சுதந்திர தின விழாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ., மண்டல நிர்வாகி முனுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். மாகியில் நடந்த விழாவில் அமைச்சர் சாய்.சரவணன்குமார் தேசியக்கொடி ஏற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தேசியக்கொடி ஏற்றினார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கட்சிக்கொடி ஏற்றினார். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் சாமிநாதன் தேசியக் கொடி ஏற்றினார். பொதுச்செயலாளர் மோகன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கோர்ட்டு

புதுவை கோர்ட்டில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி செல்வநாதன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நீதிபதிகள் இளவரசன், ஷோபனாதேவி, மோகன், அம்பிகா, ஜெயசுதா, ராஜசேகர், வக்கீல் சங்க தலைவர் குமரன், பொதுச்செயலாளர் கதிர்வேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கொம்யூன் பஞ்சாயத்து

வில்லியனூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் துணை கலெக்டர் மகாதேவன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் நடந்த விழாவில் ஆணையர் எழில்ராஜன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆணையர் ஆறுமுகம், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் ஆணையர் கார்த்திகேயன், பாகூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் நகரம், கிராமப்புறங்களில் பொதுமக்கள் பலரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.

மேலும் செய்திகள்