தனியார் நிறுவன ஊழியர் கொலையில் அண்ணன், தம்பி கைது
|நெட்டப்பாக்கம் அருகே தனியார் நிறுவன ஊழியர் கொலையில் அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.
நெட்டப்பாக்கம்
நெட்டப்பாக்கம் அருகே தனியார் நிறுவன ஊழியர் கொலையில் அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.
தனியார் நிறுவன ஊழியர்
நெட்டப்பாக்கத்தை அடுத்த கல்மண்டபம் அருகே தமிழக பகுதியான அந்தராசிக்குப்பம் நூலக தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், கல்மண்டபம் பகுதியில்உள்ள சாராயக்கடை அருகே குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த கொலை தொடர்பாக நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். சந்தேகத்தின்பேரில் 5-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்தனர்.
அண்ணன், தம்பி கைது
இந்தநிலையில், கல்மண்டபம் காலனியை சேர்ந்த மணிகண்டன், அவரது தம்பி 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், காமராஜை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது:-
கல்மண்டபம் மடுகரை மெயின் ரோட்டில் பழைய ரைஸ்மில் அருகே சம்பவத்தன்று காமராஜ் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அங்கு சிறுநீர் கழித்து கொண்டிருந்த காலனி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனையும், அவரது தாயாரையும் தரக்குறைவாக பேசியுள்ளார்.
குத்திக்கொலை
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் அங்கிருந்த மூங்கில் தடியால் தாக்கியதில் காமராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னர் பேனா கத்தியால் சரமாரியாக குத்தியதில் காமராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
இது பற்றி சிறுவன், தனது அண்ணனிடம் கூறியுள்ளான். இதையடுத்து ரத்தக்கறை படிந்த துணி மற்றும் கத்தியை கழுவி மறைத்துவைத்துவிட்டு ஒன்றும் நடக்காதது போல் இருந்துள்ளனர். போலீசாரின் தீவிர விசாரணையில் அண்ணன், தம்பி இருவரும் சிக்கிக்கொண்டனர்.
கொலைக்கு பயன்படுத்திய பேனா கத்தி, ரத்தக்கறை படிந்த துணியையும் போலீசார் கைப்பற்றினர்.
சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் அவரது தம்பியை புதுவை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் மணிகண்டனை காலாப்பட்டு மத்திய சிறையிலும், அவரது தம்பியை அரியாங்குப்பம் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.