< Back
புதுச்சேரி
நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி. மத்திய அரசை வலியுறுத்தலாம்
புதுச்சேரி

நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி. மத்திய அரசை வலியுறுத்தலாம்

தினத்தந்தி
|
9 Oct 2023 11:12 PM IST

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி வலியுறுத்தலாம் என முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி வலியுறுத்தலாம் என முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

மாநில அந்தஸ்து

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள பதிலில், புதுவை யூனியன் பிரதேசமாகவே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவு புதுவையில் ஆளும் கூட்டணி மற்றும் அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதுடன் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சமூக அமைப்பினர்

இந்தநிலையில் சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் மக்கள் உரிமை கூட்டமைப்பு, மாணவர் கூட்டமைப்பு, பெரியார் திராவிடர் கழகம், தமிழர் களம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்து பேசினார்கள்.

அப்போது புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவது தொடர்பாக சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும், அனைத்து கட்சியினர், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் டெல்லி சென்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

அப்போது அவர்களிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

அரசியலுக்காக பேசுவதா?

புதுவையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கண்டிப்பாக மாநில அந்தஸ்து தேவை. இதை கடந்த காலங்களில் நான் ஏற்கனவே கூறியுள்ளேன். மாநில அந்தஸ்து குறித்து தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் பிரச்சினை உள்ளது.

தற்போது மாநில அந்தஸ்து குறித்து பேசும் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய மந்திரியாக இருந்தபோதே மாநில அந்தஸ்தை வாங்கி தந்திருக்கலாம். ஆனால் இப்போது அரசியலுக்காக பேசுகிறார். முன்பு அதிகாரிகள் எல்லாம் மந்தமாக இருந்தனர். அப்போதே நான் மாநில அந்தஸ்தை வலியுறுத்தினேன்.

நாடாளுமன்றத்தில்..

எந்த கோப்பாக இருந்தாலும் இப்போது மத்திய அரசின் ஒப்புதலுக்கு செல்ல வேண்டியுள்ளது. மாநில அந்தஸ்து தொடர்பாக இப்போது உடனடியாக பதில் வந்துள்ளது. மாநில அந்தஸ்து தொடர்பாக மீண்டும் மத்திய அரசை வலியுறுத்துவோம்.

சமூக அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சியினரையும் டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர், உள்துறை மந்திரியை சந்தித்து பேசலாம். மாநில பா.ஜ.க.வுக்கு புதிதாக தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் எம்.பி.யாகவும் இருக்கிறார். எனவே, புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு அவர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தலாம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

அப்போது சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரும் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்