புதிய கல்விக்கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம்
|புதிய கல்விக்கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை 6 வயதில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதிய கல்விக்கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை 6 வயதில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் செயல்படும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான கோரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ஸ்ரீஜோஸ் மேத்யூ, காலாப்பட்டு ஜவகர் நவோதாய பள்ளி முதல்வர் கண்ணதாசன் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
6 வயதுக்கு மேல்...
புதிய கல்விக்கொள்கை 2020-யின் 3-வது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இந்த புதிய கல்விக்கொள்கை மூலம் பல மாற்றங்கள் வந்துள்ளன. 3 ஆண்டு பாலவாதிகா வகுப்புகள் (பால்வாடி) தொடங்க இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 49 பள்ளிகளில் கேந்திர வித்யாலயா முதலிடத்தில் உள்ளது. தாய்மொழி அல்லது பல மொழிகளின் பயன்பாட்டிற்கும், அடிப்படை கல்வியறிவை தூண்டுவதற்கும் இது ஒரு ஊக்கியாக உள்ளது.
1-ம் வகுப்பு சேர்க்கை என்பது 6 வயதுக்கு மேல்தான் நடைபெறும். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மண்பாண்டம் செய்தல், முகமூடி தயாரித்தல், தையல், எம்பிராய்டரி போன்றவை கற்றுத்தரப்பட உள்ளன. 100 சதவீத மாணவர்களும் கல்வியறிவு பெறுவதே இதன் நோக்கம்.
27 சதவீதம் பேர்
தற்போது பள்ளி படிப்பு முடிந்து மேற்படிப்புக்கு 27 சதவீதம் பேர்தான் செல்கின்றனர். அதை 2035-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக மாற்றவேண்டும். புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை உள்ளது. இதில் தாய்மொழி என்பது முக்கியமானது.
இதுதவிர பிறமொழி, அயல்நாட்டு மொழி கற்கவேண்டும். நவோதாய பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளை கற்றுத்தருகிறோம். 5 முதல் 10 கி.மீ. தூரத்துக்குள் உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கவேண்டும் என்பதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம்.
சுயமாக சிந்தித்து...
ஆண், பெண், திருநங்கைகள் என அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கவேண்டும். புதிய கல்விக்கொள்கையில் மனப்பாடம் செய்வதை தவிர்த்து மாணவர்கள் ஒரு பாடத்தை புரிந்து சுயமாக சிந்தித்து படிக்கவேண்டும். இதில் டிஜிட்டல், இணையவழி படிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பேட்டியின்போது ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி முதல்வர் நடசேன் உடனிருந்தார்.