குதிரை, மாட்டு வண்டி பந்தயம்
|காரைக்கால் கார்னிவல் விழாவின் 3-ம் நாள் விழாவில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம் இன்று நடைபெற்றது.
காரைக்கால்
காரைக்கால் கார்னிவல் விழாவின் 3-ம் நாள் விழாவில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம் இன்று நடைபெற்றது.
3-ம் நாள் விழா
காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா துறையும் இணைந்து காரைக்காலில் கார்னிவல் விழாவை நடத்தி வருகிறது. 3-ம் நாளான இன்று குதிரை வண்டி, மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.
காரைக்காலை அடுத்த வரிசைகுடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாயிலிலிருந்து துவங்கிய இப்போட்டிகளை, புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், துணை கலெக்டர் ஆதர்ஷ், கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குதிரை, மாட்டு வண்டி பந்தயம்
முதலில் காரைக்கால் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாயிலிருந்து பெரிய குதிரை வண்டிகள் 16 கிலோமீட்டர் தூரத்துக்கு பாரதியார் வீதி சித்தி விநாயகர் கோவில் வரை இப்பந்தயம் நடைபெற்றது. இதில் 10 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. அடுத்து 12 கிலோமீட்டர் தூரம் கொண்ட சின்ன குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
மேலும் மாட்டு வண்டிகள் அரசு பாலிடெக்னிக்கில் இருந்து தலத்தெரு வரையும், மீண்டும் தலத்தெருவில் இருந்து அரசு பாலிடெக்னிவரையும் 10 கிலோ மீட்டர் தூரம் இப்பந்தயம் நடந்தது. புதுச்சேரியில் இருந்து 15 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் குதிரை மற்றும் மாடுகளை உரிய மருத்துவ பரிசோதனை செய்து அதன் பிறகே பந்தயத்திற்கு அனுமதித்தார்கள். குதிரை மற்றும் மாட்டு வண்டிகள் செல்லும் சாலைகளில் போலீசார் உரிய பாதுகாப்புகளை செய்திருந்தனர்.
நாளை பரிசளிப்பு
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நிறைவு நாளான நாளை (புதன்கிழமை) பரிசுகள் வழங்கப்படுகிறது.