இந்து முன்னணி அமைப்பினர் பேரணி
|பார்வதீசுவரர் கோவில் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகத்தை உடனே நடத்தக் கோரி, இந்து முன்னணி சார்பில் பேரணி நடைபெற்றது.
காரைக்கால்
காரை கோவில்பத்து பகுதியில், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான பார்வதீசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் பக்தர்கள் மற்றும் ஊர் மக்கள் வேண்டுகோளை ஏற்று, இக்கோவில் மற்றும் கோதண்டராமர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் செய்ய கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், பணிகளை நிறைவு செய்யப்பட்டும், அரசியல் தலையீடு காரணமாக, கும்பாபிஷேகம் பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாலாலயம் செய்து விட்டதால் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறவில்லை.
எனவே திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகத்தை உடனே நடத்தக் கோரி, காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சார்பில் இன்று மாலை பேரணி நடைபெற்றது. புதிய பஸ் நிலையம் வாயிலில் தொடங்கிய பேரணி, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நிறைவு பெற்றது. பேரணிக்கு காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். நகர தலைவர் ராஜ்குமார் மற்றும் திரளான இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து இந்து முன்னணியினர் கோரிக்கை மனுவை வழங்கினர்.