< Back
புதுச்சேரி
இடி-மின்னலுடன் பலத்த மழை
புதுச்சேரி

இடி-மின்னலுடன் பலத்த மழை

தினத்தந்தி
|
1 Oct 2023 11:51 PM IST

புதுச்சேரியில் இன்று இரவு இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக நகர பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று இரவு இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக நகர பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இடி-மின்னலுடன் மழை

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் வருகிற 7-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று வழக்கம்போல் பகலில் வெயில் கொளுத்தியது. இதனால் புதுவைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். இந்த சூழ்நிலையில் மாலை வானில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தோன்றியது. இரவு 7.30 மணிக்கு மேல் இடி-மின்னலுடன் கனமழை பெய்யத்தொடங்கியது.

இதனால் கடற்கரையில் திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். ஒருசில சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி கடற்கரை அழகை ரசித்தனர்.

போக்குவரத்து கடும் பாதிப்பு

இந்த மழை சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதன் காரணமாக புதுவையின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது. மழை நின்றபின் ஒவ்வொரு பகுதியாக மின்வினியோகம் சீரானது. திடீரென கொட்டித்தீர்த்த மழையால் அண்ணா சாலை, புஸ்சி வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்தபடி சென்றன.

ஏற்கனவே சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நகர பகுதியில் போக்குவரத்து பாதித்திருந்த நிலையில், மழையின் காரணமாக மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திடீர் மழையால் சண்டே மார்க்கெட் மற்றும் சாலையோர வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

மேலும் செய்திகள்