இடி, மின்னலுடன் பலத்த மழை
|புதுவை, காரைக்காலில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
புதுச்சேரி
புதுவை, காரைக்காலில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அக்னி நட்சத்திரம்
புதுவையில் கடந்த சில மாதங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் 106 டிகிரி வரை வெப்பம் பதிவானது. அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் 28-ந்தேதி விடைபெற்ற நிலையிலும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.
மே மாதம் முடிந்து ஜூன் மாதம் பிறந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே சென்றது. நாள்தோறும் 100 டிகிரிக்கும் மேலாக 105 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது. இன்று பகலில் 102.38 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
இடி, மின்னலுடன் மழை
இதனிடையே கோடை வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பும் தள்ளிபோடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இன்று மாலையில் கருமேகங்கள் வானில் திரண்டன.
மாலை 6 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. முக்கிய சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது.
பசுமை பந்தல் விழுந்தது
மழையின்போது பலத்த காற்றும் வீசியதால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மழையால் அண்ணா சிலை அருகில் வெயிலுக்காக போடப்பட்டு இருந்த பசுமை பந்தல் அறுந்து விழுந்தது. சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் கீழே விழுந்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்த உடன் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று பேனர், பசுமை பந்தல்களை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. இந்த திடீர் மழையால் மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது. சிலர் வெயிலுக்கு எடுத்துவந்த குடைகளை மழைக்கு பயன்படுத்திக்கொண்டனர்.
பாகூர், காரைக்கால்
காரைக்காலில் இன்று இரவு ஒன்பது மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேல் வானில் லேசான மேகமூட்டம் காணப்பட்டது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. காரைக்கால் காமராஜர் சாலை, பாரதியார் சாலை, பி.கே. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடும் வெயில் கொளுத்தி வந்த நிலையில் இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காரணமாக இரவு முழுவதும் இதமான சூழல் நிலவியது.
---------