போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
|காரைக்காலில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் போலீஸ் போல் நடித்து 3½ பவுன் தங்கச்சங்கிலி பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரைக்கால்
காரைக்காலில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் போலீஸ் போல் நடித்து 3½ பவுன் தங்கச்சங்கிலி பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தனியாக சென்ற மூதாட்டி
காரைக்கால் மரியம் நகர் முதல் குறுக்குத்தெருவில், தனது மகளுடன் வசிப்பவர் தையல்நாயகி (வயது 62). இவர், கோதுமை மாவு அரைப்பதற்காக மஸ்தான்பள்ளி வீதியில் நேற்று தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 மர்ம ஆசாமிகள் தையல்நாயகியிடம் தங்களை போலீஸ் என்று கூறிக் கொண்டு, 'இப்படித் தான் தனியாக சென்ற ஒரு பாட்டியிடம் மர்ம நபர்கள் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்று விட்டார்கள். எனவே தங்கச்சங்கிலியை பையில் வைத்துக் கொண்டு செல்லுங்கள்' என கூறியுள்ளனர்.
பறித்துக் கொண்டு தப்பினர்
தையல்நாயகியும் அவர்கள் சொன்னதை நம்பி தனது கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்கச்சங்கிலியை கழற்றி பையில் வைக்க முயன்றார். அப்போது அந்த ஆசாமிகள் இருவரும் திடீரென்று அவரிடம் இருந்து தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு, அருகில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்து காரைக்கால் நகர போலீசில் தையல்நாயகி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் போல் நடித்து அறிவுரை சொல்வது போல் தனியாக சென்ற மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.