< Back
புதுச்சேரி
ஆடல், பாடல்களுடன் இளைஞர்கள் கொண்டாடிய ஹேப்பி ஸ்ட்ரீட்
புதுச்சேரி

ஆடல், பாடல்களுடன் இளைஞர்கள் கொண்டாடிய 'ஹேப்பி ஸ்ட்ரீட்'

தினத்தந்தி
|
22 Oct 2023 9:59 PM IST

புதுச்சேரி கடற்கரை சாலையில் முதன் முறையாக ஆடல், பாடல்களுடன் இளைஞர்கள் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ கொண்டாடினர்.

புதுச்சேரி

'ஹாப்பி ஸ்ட்ரீட்'

பொதுமக்களுக்கு மன மகிழ்ச்சி மற்றும் புத்துணர்வு அளிக்கும் விதமாக வயது வரம்பின்றியும் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற பெயரில் ஞாயிறு கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை சாலை காந்திதிடலில் இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை முதன் முறையாக 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆடல், பாடல் கொண்டாட்டம்

காலை 6 மணி முதலே இளைஞர்கள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கடற்கரை காந்தி சிலை முன்பு திரண்டனர்.

இசைக்கப்பட்ட பாடலுக்கு ஏற்ப இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாகமாக நடனமாடி ஆர்ப்பரித்தனர். அத்துடன் பந்து எறிதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும் நடந்தது.

வார விடுமுறை, ஆயுதபூஜை விடுமுறை என தற்போது தொடர் விடுமுறை என்பதால் தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் புதுவைக்கு வந்திருந்தனர். அவர்களும் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பங்கேற்று உற்சாகம் அடைந்தனர். கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வயது வித்தியாசமின்றி ஆடிப்பாடி கொண்டாடினர். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கடற்கரையை ஒட்டியுள்ள 'ஒயிட் டவுன்' பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணியில் போலீசார் அதிக அளவில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்