அங்கன்வாடி பணியாளர்களுக்கு கையேடு
|காரைக்காலில் ஓ.பி.சி. கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா கையேடு வழங்கினார்.
காரைக்கால்
காரைக்காலில் ஓ.பி.சி. கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா கையேடு வழங்கினார்.
ஓ.பி.சி. பிரிவு கணக்கெடுப்பு
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி. (இதர பிற்படுத்தப்பட்டோர்) பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்த கருத்துகேட்பு கூட்டம் ஓ.பி.சி. ஆணையத்தின் தலைவர் நீதிபதி சசிதரன் (ஓய்வு) தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து வீடு வீடாக அங்கன்வாடி ஊழியர்கள் சென்று கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் பயிற்சி கூட்டம் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் அமைந்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகத்தில் ஓ.பி.சி. கணக்கெடுப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், மாவட்ட நீதிபதி ராமபத்திரன் (ஓய்வு), நீதித்துறை சட்ட அதிகாரி ஜான்சி, துணை மாவட்ட கலெக்டர் ஜான்சன், உள்ளாட்சி துறை துணை இயக்குனர் சுபாஷ், நகராட்சி ஆணையர் சத்யா, சமூக நலத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) ராஜேந்திரன் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் கலந்துகொண்டனர்.
344 பணியாளர்களுக்கு கையேடு
இந்த கூட்டத்தின்போது, காரைக்காலில் அமைந்துள்ள 17 வார்டுகளில் ஓ.பி.சி. குறித்து கணக்கெடுப்பு நடத்துவதற்கான கையேட்டை காரைக்காலில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் பணியாற்றும் 344 அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
தங்கள் பணிகளை நாளை முதல் தொடங்கி வாட்ஸ்-அப் குழு அமைத்து சிறப்பாக செய்யுமாறு அங்கன்வாடி பணியாளர்களை அமைச்சர் சந்திரபிரியங்கா கேட்டுக்கொண்டார்.