தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்திற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல்
|தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 145 பேரை நியமிக்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி
புதுவை அரசின் கல்வித்துறையில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர்கள் பணிநியமனம் தொடர்பான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கவர்னர் ஒப்புதல்
அதாவது 145 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை நியமிக்க கோப்புகள் தயாரிக்கப்பட்டு அமைச்சர் நமச்சிவாயம், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரின் ஒப்புதலோடு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுப்பப்பட்டது. இந்த கோப்புக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து 145 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான நடவடிக்கையில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.