ரூ.50 கோடி நிலமோசடியில் அரசு அதிகாரி கைது
|புதுவை காமாட்சி அம்மன்கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிகாரி கைதானார். மற்றொரு அதிகாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி
புதுவை காமாட்சி அம்மன்கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிகாரி கைதானார். மற்றொரு அதிகாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவில் நிலம்
புதுவை பாரதி வீதியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் இருந்து வந்தது. மொத்தம் 64,035 சதுர அடி உள்ள இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துவிட்டதாக அரசுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. ரூ.50 கோடி மதிப்பிலான இந்த நிலம் மோசடியாக விற்கப்பட்ட விவகாரம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சந்தோஷ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், ஏட்டுகள் உதயசந்திரன், பூரணி, கிருஷ்ணமூர்த்தி, போலீசார் கோவிந்தன், முரளி ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
அதிகாரிகளுக்கு தொடர்பு
இந்த வழக்கில் கோவில் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்றது அம்பலத்துக்கு வந்ததையடுத்து அடுத்தடுத்து 15 பேர் கைது செய்யப்பட்டனர். போலி ஆவணத்தை பதிவு செய்ததாக வில்லியனூர் சார்பதிவாளர் சிவசாமி கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் போலி ஆவண தயாரிப்புக்கு உதவி இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நில அளவை மற்றும் பத்திர பதிவேடுகள் துறை இயக்குனர் ரமேஷ், அப்பேதைய செட்டில்மெண்ட் அதிகாரி பாலாஜி (முன்னாள் மீன்வளத்துறை இயக்குனர்) ஆகியோரும் இதில் சம்பந்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் பட்டியலில் அவர்கள் இருவரது பெயர்களும் சேர்க்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அரசால் அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அதிகாரி கைது
இந்தநிலையில் இருவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையே தலைமறைவான ரமேஷ், பாலாஜி ஆகியோரை சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் இவர்களை மட்டுமல்லாமல் கோவில் நிலமோசடியில் தொடர்புடைய பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை கைது செய்ய கோரியும் புதுவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்தநிலையில் சென்னை கோயம்பேடு பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் பாலாஜி தங்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சென்னை விரைந்த சிறப்பு அதிரடிப்படை போலீசார் ஏ.டி.எம்.-க்கு பணம் எடுக்கச் சென்ற அவரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
இதைத்தொடர்ந்து புதுச்சேரிக்கு அழைத்து வரப்பட்ட பாலாஜியை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்தனர். கோவில் நிலமோசடி குறித்து அவர்கள் விசாரித்ததை தொடர்ந்து லாஸ்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பாலாஜியை தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் முன் போலீசார் ஆஜர்படுத்தினர். அங்கு விசாரணை நடத்திய நீதிபதி, அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பாலாஜி அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான அதிகாரி பாலாஜி மீது நில அளவை மற்றும் பத்திர பதிவேடுகள் துறையில் செட்டில்மெண்ட் அதிகாரியாக பணிபுரிந்தபோது போலி உயிலை ஆதாரமாக வைத்து பட்டாமாற்றம் செய்து கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி கோர்ட்டில் முறைப்படி அனுமதி பெற்று பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
மற்றொரு அதிகாரி எங்கே?
இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய நில அளவை துறை இயக்குனர் ரமேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் எங்கே இருக்கிறார்? என்பது தெரியாத நிலையில், தற்போது தமிழக பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே, விரைவில் சிக்குவார் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
கோவில் நிலமோசடியில் பிரதானமாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் இந்த 2 அதிகாரிகளும் சிக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.