அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்படும்
|புதுவையில் அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி
புதுவையில் அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறை தீர்ப்பு கூட்டம்
பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று மதியம் கவர்னர் மாளிகையில் நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
முன்னதாக புதுச்சேரி அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல சேவைகள் துறை மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான சிகிச்சை முகாம் முத்தியால்பேட்டையில் நடந்தது. விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிலுவைத்தொகை ரூ.27 ஆயிரம்
டெங்கு காய்ச்சலுக்கு முன் ஏற்பாடுகள் செய்துள்ளோம். நிபா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது. மாகியில் தடுப்பு நடவடிக்கை எடுத்துள்ளோம். முககவசம் அணிய கோரிக்கை வைத்துள்ளோம். கொரோனா அளவுக்கு பரவக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். பஸ், ரெயில், விமானம் மூலம் வருபவர்களுக்கு அறிகுறிகள் இருக்கிறதா? என்று கண்காணிக்கிறோம்.
தமிழகத்தில் பெண்களுக்கான உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முன்பே இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம். பிரதமரின் தொலைநோக்கு பார்வையினால் தான் நேரடியாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் இன்று இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து 2½ ஆண்டுகள் ஆவதால் 27 மாதங்களுக்கும் சேர்த்து தலா ரூ.27 ஆயிரம் அனைவருக்கும் தந்தால் நன்றாக இருக்கும்.
தடை விதிக்கப்படும்
சுகாதாரத்துறை டாக்டர்கள் அரசு மருத்துவமனைக்கு முழுமையாக பணியாற்ற வேண்டும். இங்கு பணியில் இருப்பவர்கள், தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டு அரசு பொது மருத்துவமனைக்கு தாமதமாக வருவதாக புகார்கள் வந்துள்ளன. இதனை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மக்கள் பாதிக்கப்பட்டால், அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலோ, தனியாகவோ சிகிச்சை அளிப்பதற்கு தடை விதிக்க நாங்கள் தயங்க மாட்டோம்.
எல்லா விதத்திலும் மக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பி வரவேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு பல திட்டங்களைக் கொடுத்திருக்கிறார்கள். சுகாதார அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. "சேவா பக்வாடா" திட்டம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் 17-ந் தேதி வரை நடக்க இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.