பழங்கள், பலகாரங்கள் ஆயிரமாயிரமாய் அம்மனுக்கு படைப்பு
|ஆயிரங்காளியம்மன் கோவில் பூஜை விழாவையொட்டி அம்மனுக்கு ஆயிரமாயிரமாய் பழங்கள், பலகாரங்கள் படைக்கப்பட்டன.
காரைக்கால்
ஆயிரங்காளியம்மன் கோவில் பூஜை விழாவையொட்டி அம்மனுக்கு ஆயிரமாயிரமாய் பழங்கள், பலகாரங்கள் படைக்கப்பட்டன.
பூஜை விழா
காரைக்காலை அடுத்த திரு-பட்டினத்தில் ஆயிரங் காளியம்மன் கோவில் உள்ளது. அம்மனுக்கு படைக்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஆயிரம், ஆயிரமாக படைக்கப்படுவதால் ஆயிரங்காளியம்மன் என்று அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடை பெறுகிறது.
அதன்படி இந்த ஆண்டு பூஜை விழா இன்று இரவு பேழையிலிருந்து (பெட்டி) அம்பாளை எழுந்தருளச்செய்யும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இன்று மதியம் 1,000 மண் பானைகளில் பக்தர்கள் பொங்கல் வைத்து, கோவிலுக்கு கொண்டு வந்தனர். இரவு திரு-பட்டினம் ராஜசோளீஸ்வரர் கோவிலிலிருந்து, ஆயிரங்காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வரிசை பொருட்களை எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
அம்மனுக்கு படைப்பு
இதில் பழங்கள், பலகாரங்கள், சித்திரானங்கள் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்கள் ஆயிரம், ஆயிரமாய் எடுத்து வரப்பட் டன. தொடர்ந்து பொங்கல், வரிசைப் பொருட்கள் ஆயிரங்காளியம்மன் முன்பு வைத்து படைக்கப்பட்டது.
நாளை (புதன்கிழமை) அதிகாலை அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, பின்னர் பக்தர்கள் அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) மட்டுமே பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 9-ந்தேதி நள்ளிரவில் அம்மனை பேழையில் மீண்டும் ஸ்தாபிதம் செய்யும் நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
காரைக்கால் ஆயிரங்காளியம்மன் பூஜை விழாவை முன்னிட்டு இன்று ஒரு நாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் இன்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.