பிரான்ஸ் நாட்டின் புனிதநீர் ஊற்றி ஜெபிப்பு
|வில்லியனூர் மாதா குளத்தில் பிரான்ஸ் நாட்டின் புனிதநீர் ஊற்றி ஜெபிக்கப்பட்டது.
வில்லியனூர்
வில்லியனூர் மாதா குளத்தில் பிரான்ஸ் நாட்டின் புனிதநீர் ஊற்றி ஜெபிக்கப்பட்டது.
லூர்து மாதா ஆலயம்
வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்து மாதா ஆலயம் 147 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த மாதா ஆலயத்திற்கு முன்பாக குளம் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இயற்கையாக அமைந்துள்ள இந்த மாதா குளத்தின் கரைகள் 1924-ம் ஆண்டு அருட்தந்தை லெஸ்போன் என்பவரால் கட்டப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் பெர்னதெத் என்ற சிறுமிக்கு, மாதா காட்சி கொடுத்த இடமான மசபியேல் குகையில் உள்ள அற்புத சுனையில் இருந்து கொண்டு வரப்படும் புனித நீரானது, வில்லியனூர் மாதா திருத்தல குளத்தில் ஆண்டு தோறும் கலக்கப்பட்டு வருகிறது.
புனித நீர் கலப்பு
இந்த புனித நீரை பயன்படுத்தும் பக்தர்கள் பலவிதமான கண் நோய்கள், தோல் வியாதிகள் மற்றும் உடல் நோய்களில் இருந்து குணமாகி வருவதாகவும், வில்லியனூர் மாதா ஆலய குளத்தை தொடர்ச்சியாக 7 சனிக்கிழமைகளில் பக்தியோடு சுற்றி வந்து ஜெபிக்கும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறி வருவதாகவும் ஐதீகம் உண்டு.
இத்தகைய சிறப்பு மிகுந்த வில்லியனூர் மாதா ஆலய குளத்தில் இந்த ஆண்டும் பிரான்ஸ் நாட்டின் லூர்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் ஊற்றி ஜெபிக்கப்பட்டது. முன்னதாக அருள்நிறை ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வில்லியனூர் தூய லூர்து மாதா திருத்தல பங்கு தந்தை ஆல்பர்ட், லூர்து அன்னை பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்வின் அன்பரசு மற்றும் பங்கு பேரவையினர், இளைஞர் இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.
தேர்பவனி
பின்னர், மாதா குளத்தின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக 'வில்லியனூர் விடி வெள்ளியே' என்ற பாடல் வெளியிடப்பட்டது. முன்னதாக காலை 6 மணிக்கு திருப்பலி, அதனை தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி சிறிய தேர்பவனியும் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்புக் கூட்டு திருப்பலி நடைபெற்றது.