< Back
புதுச்சேரி
வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் நகை-பணம் திருட்டு
புதுச்சேரி

வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் நகை-பணம் திருட்டு

தினத்தந்தி
|
14 Oct 2023 9:18 PM IST

காலாப்பட்டில் வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் ஜன்னலை உடைத்து நகை-பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காலாப்பட்டு

காலாப்பட்டில் வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் ஜன்னலை உடைத்து நகை-பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வெளிநாட்டில் வேலை

புதுவையை அடுத்த சின்னகாலாப்பட்டு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வரதன் (வயது 53). இவர் நைஜீரியாவில் உள்ள ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.

இவர் விடுமுறையில் சமீபத்தில் புதுச்சேரி வந்தார். இதைத்தொடர்ந்து அவரது மனைவி ராதிகாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

நகை-பணம் திருட்டு

பிற்பகலில் அவர் வீட்டிற்கு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவினை திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவை உடைத்து அதனுள் இருந்த கம்மல், மோதிரம் என 4¼ பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது. மேலும் ரூ.40 ஆயிரம் ரொக்கபணம், செல்போனும் திருடப்பட்டிருந்தது.

அவர் சமையலறைக்கு சென்று பார்த்தபோது ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் யாரோ ஜன்னல் கம்பிகளை உடைத்து அதன் வழியாக புகுந்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

வாலிபர் பிடிபட்டார்

இதுதொடர்பாக வரதன் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில் போலீசார் ரோந்து சென்றபோது சின்னகாலாப்பட்டு விளையாட்டு திடலில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், சேலம் மேட்டூரை சேர்ந்த ரங்கசாமி என்பவரின் மகன் ஈஸ்வரன் என்ற கோடீஸ்வரன் (30) என்பது தெரியவந்தது.

பழைய குற்றவாளி

அவர் வரதனின் வீட்டின் ஜன்னலை உடைத்து நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து நகை, பணத்தை முழுவதுமாக போலீசார் மீட்டனர். மேலும் அவர் திருட்டுக்கு பயன்படுத்திய கிரில் கட்டர் மெஷினையும் பறிமுதல் செய்தனர்.

வரதன் மீது சேலம், ஈரோடு, திருப்பூர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு புதுவை பல்கலைக்கழகத்துக்கு கட்டிட வேலைக்கு வந்த ஈஸ்வரன் மீண்டும் இங்கு வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த வழக்கில் திறமையைாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து நகை, பணத்தை மீட்ட போலீசாரை டி.ஐ.ஜி. பிரிஜேந்திர குமார் யாதவ், கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுவாதிசிங் ஆகியோர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்