மோட்டார் வாகன ஊழியர்களுக்கு சம்பள நிர்ணயம்
|புதுவை அரசின் தொழிலாளர்துறை மோட்டார் வாகன ஊழியர்களுக்கு சம்பள நிர்ணயம் செய்துள்ளது.
புதுச்சேரி
புதுவை அரசின் தொழிலாளர்துறை தனியார் நிறுவன ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான வரைவு பட்டியலை தயார் செய்து வெளியிட்டு வருகிறது. இதில் ஆட்சேபனை இருப்பின் 60 நாட்களுக்குள் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி மோட்டார் வாகன போக்குவரத்து ஊழியர்களுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெக்கானிக்குகளுக்கு மாதம் ரூ.17 ஆயிரமும், டிரைவர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 796 என பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அச்சு பணியில் இருப்பவர்களுக்கும் ரூ.10 ஆயிரத்து 979 முதல் ரூ.11 ஆயிரத்து 561 வரை சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தொழிலாளர்துறை வெளியிட்டுள்ளது.
மேலும் துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வு திட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான அதிகாரியாக கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். கொம்யூன் பஞ்சாயத்துகளில் இதற்கான அதிகாரம் அந்தந்த ஆணையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறக்கும் தொழிலாளர், அவர்களுக்கான இழப்பீடு வழங்குவது குறித்து மாநில கண்காணிப்பு குழு ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதிக்குள் முழுமையான அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.