< Back
புதுச்சேரி
கோவில் நிலத்தை மீட்கக்கோரி மீனவர்கள் போராட்டம்
புதுச்சேரி

கோவில் நிலத்தை மீட்கக்கோரி மீனவர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
26 Oct 2023 9:48 PM IST

வம்பாகீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நிலத்தை மீட்கக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரிய மார்க்கெட் மீன் அங்காடி வெறிச்சோடியது.

புதுச்சேரி

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

புதுவை வம்பாகீரப்பாளையத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மயான கொள்ளை நிகழ்ச்சி சன்னியாசிதோப்பு பகுதியில் நடைபெறும். இந்த இடத்தை தனிநபர் ஒருவர் பட்டா பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு பட்டா வழங்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணியினர் மற்றும் மீனவர் பஞ்சாயத்தார் சார்பில் சுதேசி மில் அருகே போராட்டம் நடந்தது.

வெறிச்சோடிய மார்க்கெட்

போராட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார் தலைமை தாங்கினார். இதில் வம்பாகீரப்பாளையம் மீனவ பஞ்சாயத்தார், மீனவர்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் கோவில் நிலத்தை மீட்டு தரக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதற்கிடையே கோவில் நிலத்தை மீட்கக்கோரி புதுவை மீனவ கிராம பஞ்சாயத்தார் இன்று ஒருநாள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதேபோல் புதுவை பெரிய மார்க்கெட் மீன் அங்காடி மற்றும் உப்பளம் துறைமுக சாலையிலும் பெண்கள் மீன்கள் விற்பனை செய்யவில்லை. இதனால் பெரிய மார்க்கெட்டில் உள்ள மீன் அங்காடி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்