மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக்கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்
|காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக்கோரி மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால்
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக்கோரி மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன்பிடி துறைமுக விரிவாக்கம்
காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு, மண்டபத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகு மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யவேண்டும், துறைமுகத்தை ஒட்டிய கடற்கரை முகத்துவாரத்தை தூர்வார வேண்டும், மீனவ கிராம சாலைகளை சீரமைக்க வேண்டும், அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக மீனவர் பஞ்சாயத்தார் அறிவித்து இருந்தனர்.
வேலைநிறுத்தம்
அதன்படி கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள் துறைமுகம் மற்றும் துறைமுகத்தை ஒட்டிய அரசலாற்றங்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, தங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலை அருகே மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீனவ பெண்கள் கலந்துகொண்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டரிடம் மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
வெறிச்சோடிய துறைமுகம்
அவர்கள், மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக்கோரி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
மீனவர்களின் போராட்டம் காரணமாக காரைக்கால் மீன்பிடி துறைமுகம் நேற்று வெறிச்சோடி இருந்தது.