விசைப்படகுகள், வலைகளை சீரமைக்கும் மீனவர்கள்
|புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி விசைப்படகுகள், வலைகள் சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
புதுச்சேரி
மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி விசைப்படகுகள், வலைகள் சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மீன்பிடி தடைக்காலம்
கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகளவில் நடைபெறும். இந்த காலங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். அந்த சமயங்களில் மீனவர்கள் விசைப்படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும்போது படகுகள் மற்றும் வலைகளில் அடிபட்டு மீன்குஞ்சுகள் அழியும் நிலை ஏற்பட்டது.
கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும், கடந்த 1983-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் கிழக்கு கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 30-ந் தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது.
விசைப்படகு, வலைகள் சீரமைப்பு
இந்த நிலையில் தற்போது மீன்பிடி தடைக்காலத்தை புதுவை அரசு 61 நாட்களாக உயர்த்தி அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 61 நாட்கள் மீனவர்கள் ஆழ்கடலில் விசைப்படகில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள், இழுவை படகுகளை மீனவர்கள் ஆழ்கடலுக்கு எடுத்துச்சென்று மீன்பிடிக்க கூடாது.
மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்து 5 நாட்கள் ஆன நிலையில் மீனவர்கள் தங்களது படகுகளை உப்பளம், தேங்காய்த்திட்டு துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் அவர்கள் மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி, தங்களது விசைப்படககள், இழுவைப்படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது படகுகளுக்கு வர்ணம் பூசுதல், படகுகளில் உள்ள பழுதினை வெல்டிங் செய்து சரிசெய்தல், பலகைகள், மீன்பிடி வலைகளையும் சீரமைத்து வருகின்றனர்.