கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் சாலை மறியல்
|கோட்டக்குப்பம் அருகே கடற்கரையில் படகுகள் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் போராட்டம்-மறியலில் ஈடுபட்டனர். போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோட்டக்குப்பம்
கோட்டக்குப்பம் அருகே கடற்கரையில் படகுகள் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் போராட்டம்-மறியலில் ஈடுபட்டனர். போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
படகு நிறுத்துவதில்...
புதுவை அருகே தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் மீனவ கிராமம் உள்ளது. இங்கு சின்னமுதலியார் சாவடி மீனவர்கள் பல ஆண்டுகளாக தங்களது மீன்பிடி படகுகளை நிறுத்தி வைத்து மீன் பிடி தொழிலுக்கு சென்று வருகின்றனர். இதனால் படகு நிறுத்துவதில் தந்திராயன்குப்பம் மீனவர்களுக்கும், சின்னமுதலியார் சாவடி மீனவர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் சின்ன முதலியார்சாவடி மீனவர்கள் தந்திராயன்குப்பத்தில் படகுகளை நிறுத்தக்கூடாது என தந்திராயன்குப்பம் மீனவ பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் இன்று தந்திராயன்குப்பம் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் தலைமையில் மீனவர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தந்திராயன்குப்பம் ஊருக்குள் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தந்திராயன் குப்பம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சின்ன முதலியார் சாவடி மீனவர் படகுகளை உடனே அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் தீக்குளிப்பதாக தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசாருடன் தள்ளுமுள்ளு
பின்னர் அவர்கள் அங்கிருந்து கருப்புக்கொடி ஏந்தியபடி ஊர்வலமாக வந்து புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை பேரிகார்டு வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் போராட்டக்காரர்கள் பேரிகார்டை தள்ளி விட்டு முன்னேறி செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சுனில், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து பேராாட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் விடுவித்தனர். இந்த சம்பத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.