மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்தக்கோரி கலெக்டரிடம் முறையிட்ட மீனவர்கள்
|காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்தக்கோரி கலெக்டரை நேரில் சந்தித்து மீனவர்கள் முறையிட்டனர்
காரைக்கால்
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்தக்கோரி கலெக்டரை நேரில் சந்தித்து மீனவர்கள் முறையிட்டனர்.
வேலை நிறுத்த போராட்டம்
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்தவேண்டும். முகத்துவாரத்தை தூர்வாரவேண்டும். மீனவர்கள் இட ஒதுக்கீட்டில் இ.பி.சி. பிரிவில் இருந்து எம்.பி.சி. பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கடந்த 18-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 8-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது. போராட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 11 கிராம மீனவ பஞ்சாயத்தார்கள் நேரில் சந்தித்து முறையிட்டனர்.
கலெக்டரின் முறையீடு
அப்போது 50 முதல் 60 படகுகள் இருக்கும் போது கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தில் தற்போது, 300-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இடப்பற்றாக்குறையால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்து வருகிறது. எனவே துறைமுகத்தை உடனடியாக விரிவுப்படுத்த வேண்டும். துறைமுகத்தை ஒட்டிய முகத்துவாரம் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாராத காரணத்தால், படகுகள் அடிக்கடி, முகத்துவார மணல் மற்றும் கற்களில் மோதி சேதமடைகிறது. மீனவர்கள் இட ஒதுக்கீடு இ.பி.சி. பிரிவில் எம்.பி.சி. பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நல்ல முடிவு எடுக்கப்படும்
கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் குலோத்துங்கன் 'தங்களது கோரிக்கை அனைத்தும் அரசிடம் முறைப்படி எடுத்து கூறப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் மீன்வளத்துறை அமைச்சர் காரைக்கால் வர இருக்கிறார். அமைச்சரிடம் இதுகுறித்து கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்' என்றார்.
அப்போது துணை மாவட்ட கலெக்டர் ஜான்சன், போலீஸ் சூப்பிரண்டுகள் நிதின் கவுகால் ரமேஷ், சுப்ரமணியன், மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் சவுந்தரபாண்டி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.