போக்சோ வழக்கில் தேடப்பட்ட மீனவர் கைது
|அரியாங்குப்பம் அருகே போக்சோ வழக்கில் தேடப்பட்ட மீனவரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்
கன்னியாகுமரி மாவட்டம் புத்தந்துறை பகுதியை சேர்ந்தவர் ரத்தன் (வயது 38). மீனவர். இவர் புதுவை மாநிலம் தவளக்குப்பம் அருகே உள்ள புதுகுப்பத்தில் தங்கி இருந்து மீன்பிடித்து வந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமியை அவர் திருமணம் செய்துகொண்டார். திருமணமான சில நாட்களில் சிறுமி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து போக்சோ வழக்கில் ரத்தன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வசந்தராஜ், ஹரிஷ் ஆகியோர் ரத்தனை தேடி வந்தனர். இந்தநிலையில் வீராம்பட்டினம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த ரத்தனை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.