பால் வேன் மோதி மீனவர் பலி
|திரு-பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பால் வேன் மோதிய விபத்தில் மீனவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
காரைக்கால்
நாகை மாவட்டம் சாமந்தம்போட், அமிர்தா நகரை சேர்ந்தவர் கவுதமன் (வயது 42). மீனவர். இவர் நேற்று முன்தினம் அதிகாலை அதே பகுதியை சேர்ந்த ராஜம் (38) என்பவருடன் மீன்பிடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு புறப்பட்டார்.
காரைக்கால்- நாகை தேசிய நெடுஞ்சாலையில் திரு-பட்டினம் பிராவிடையான் ஆறு அருகே சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த பால் வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கவுதம், ராஜம் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
பலி
அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் கவுதம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார். ராஜம் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின்பேரில் காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த கவுதமனுக்கு தாமரைச்செல்வி என்ற மனைவியும், கவின் என்ற 3 மாத குழந்தையும் உள்ளது.