< Back
புதுச்சேரி
இளநிலை மருத்துவ படிப்புக்கு முதல் சுற்று இடங்கள் ஒதுக்கீடு
புதுச்சேரி

இளநிலை மருத்துவ படிப்புக்கு முதல் சுற்று இடங்கள் ஒதுக்கீடு

தினத்தந்தி
|
19 Sept 2023 12:00 AM IST

புதுச்சேரியில் இளநிலை மருத்துவ படிப்பிற்கு முதல் சுற்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வருகிற 23-ந் தேதிக்குள் கல்லூரியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரியில் இளநிலை மருத்துவ படிப்பிற்கு முதல் சுற்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வருகிற 23-ந் தேதிக்குள் கல்லூரியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியருப்பதாவது:-

இடங்கள் ஒதுக்கீடு

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சென்டாக் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எம்.பி.பி.எஸ். பல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான முதல் சுற்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் தங்கள் பயனாளர் ஐ.டி.யில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட உத்தரவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வருகிற 23-ந் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

புதுச்சேரி மண்டலத்திற்கு வெளியே வசிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் தகவல் தெரிவிக்கும் மாணவர்கள் மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட கல்லூரியின் இணையதளத்தை பார்க்க வேண்டும்.

கட்டணம்

மாணவர்கள் புதுச்சேரி அரசால் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை ஆன்லைன் மூலம் சென்டாக் கணக்கிற்கு செலுத்த வேண்டும். பணம் செலுத்தும் முன்பு உதவி வழிமுறைகளை கவனமாக படிக்கவும். சென்டாக் மூலம் வசூலிக்கப்படும் கட்டணம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெற்றுள்ள புதுச்சேரி எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கான கல்வி கட்டணம் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செலுத்தப்படும். மேலும், கல்வி கட்டண விவரம் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

10 சதவீதம் இடஒதுக்கீடு

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் அரசு பள்ளிகளில் படிக்கும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மருத்துவ படிப்பு கனவு நிறைவேறி உள்ளது.

அந்த வகையில் மடுகரை வெங்கடசுப்பாரெட்டியார் அரசு பெண்கள் பள்ளியில் படித்த திவ்யா என்ற மாணவிக்கு இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதே போல் அந்த பள்ளி மாணவி விஜய சந்திராகாவுக்கு பிம்ஸ் மருத்துவக்கல்லூரியிலும், புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பள்ளி மாணவி அருணாவுக்கு மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

ஒதுக்கீடு விவரம்

எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 370 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் அரசு மருத்துவ கல்லூரி-127, பிம்ஸ்-55, மணக்குள விநாயகர்-90, வெங்கடேஸ்வரா-92 என மொத்தம் 364 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 6 இடங்கள் காலியாக உள்ளன.

பல் மருத்துவ கல்லூரி

பல் மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீடாக 112 இடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 111 இடங்களுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 1 இடம் காலியாக உள்ளது.

இதே போல் மாகி ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீடாக உள்ள 44 இடங்களில் 42 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்