திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் தீ விபத்து
|திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆயுதபூஜை கொண்டாடிய 3 மணி நேரத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கணினி, ஆவணங்கள் எரிந்து நாசமானது.
திருநள்ளாறு
ஆயுத பூஜை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, பெரும்பாலான அரசு அலுவலகங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.
அதன்படி, காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள், ஊழியர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். இரவு காவல்பணியில் ஆரிப் என்ற காவலாளி பணியில் இருந்தார்.
தீ விபத்து
இரவு 9 மணிக்கு, கொம்யூன் பஞ்சாயத்து, அலுவலகத்தின் கணக்கு பதிவேடுகள் அறையில் இருந்து புகை வருவதை கண்ட ஆரிப், உடனே ஆணையர் மற்றும் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து, அருகில் இருந்த சிலருடன் சேர்ந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
மேலும் திருநள்ளாறு சுரக்குடி தீயணைப்பு நிலைய முதன்மை தீயணைப்பு வீரர் சங்கர் தலைமையில், வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
கணினி, பிரிண்டர், ஆவணங்கள் நாசம்
தீவிபத்தில் அலுவலக அறையில் இருந்த கணினி, பிரிண்டர், மேஜை, நாற்காலிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், அலுவலகத்தில் பல இடங்களில் சுவிட்ச் போர்டுகள் உடைந்து பழுதாகி இருந்ததும், பல இடங்களில் வயர்கள் வெளிபுறத்தில் செல்வதையும் காண முடிந்தது. எனவே, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.