மாமியார் வீட்டுக்கு ரெயிலில் சென்ற நிதி நிறுவனர் மாயம்
|கோட்டுச்சேரியில் மாமியார் வீட்டுக்கு ரெயிலில் சென்ற நிதி நிறுவனர் மாயமானார்.
கோட்டுச்சேரி
காரைக்கால் வரிச்சிக்குடி தேவனூர் சாலையை சேர்ந்தவர் அஜய்குமார் (வயது 32) நிதி நிறுவன தொழில் செய்து வருகிறார். அவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன் திருப்பூரைச் சேர்ந்த அட்சயாவுடன் திருமணம் நடந்தது. அட்சயா, கடந்த சில நாட்களுக்கு முன் பெற்றோர் வீடான திருப்பூருக்கு சென்றார். மனைவியை அழைத்து வர அஜய்குமார் காரைக்காலில் இருந்து ரெயிலில் புறப்பட்டுச் சென்றார்.
ஈரோடு வந்ததும், தனது மனைவிக்கு செல்போனில் பேசி இருக்கிறார். அதன் பின்னர் அவர் திருப்பூருக்கு செல்லவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக உறவினர்கள், நண்பர்களை தொடர்பு கொண்டு தேடியும் அவர் எங்கு போனார் என தெரியவில்லை.
புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து அஜய்குமார் எங்கு போனார்? அவருக்கு என்ன ஆனது? யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.