கள உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு
|புதுவையில் கள உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு 22 மையங்களில் நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை 7,860 பேர் எழுதுகின்றனர்.
புதுச்சேரி
புதுவையில் கள உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு 22 மையங்களில் நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை 7,860 பேர் எழுதுகின்றனர்.
இது குறித்து புதுச்சேரி அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் அரசு சார்பு செயலாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள உதவியாளர்
புதுச்சேரி நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் 30 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வு மொத்தம் 22 மையங்களில் நடக்கிறது. அதாவது புதுவையில் 16 மையங்களிலும், காரைக்காலில் 3 மையங்களிலும், மாகியில் 1 மையத்திலும், ஏனாமில் 2 மையத்திலும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது.
இந்த தேர்வு எழுத மொத்தம் 7,859 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த பணியில் 1000-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
நுழைவுச்சீட்டு
விண்ணப்பதாரர்கள் அவர்களது நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும். நுழைவுச்சீட்டில் அவர்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டி கையொப்பமிட்டு எடுத்து வரவேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் நுழைவுச்சீட்டுடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், பான்கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் அசலை எடுத்து வர வேண்டும்.
தேர்வு மைய நுழைவாயில் காலை 10 மணிக்கு மூடப்படும். அதற்கு பின்னர் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். கைப்பைகள், செல்போன், புளூ டூத் சாதனங்கள், ஹெட் போன், கால்குலேட்டர், பென் டிரைவ் போன்ற இதர எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக https://recruitment.py.gov.in என்னும் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.