பெண் தாதா எழிலரசி ஊருக்குள் நுழைய தடை
|பெண் தாதா ஊருக்குள் நுழைய தடை விதித்து துணை கலெக்டர் ஜான்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காரைக்கால்
பெண் தாதா ஊருக்குள் நுழைய தடை விதித்து துணை கலெக்டர் ஜான்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெண் தாதா
திரு-பட்டினத்தை அடுத்த நிரவியில் புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவகுமார் கடந்த 2017-ம் ஆண்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பெண் தாதா எழிலரசி, அவரது கூட்டாளி விவி என்ற விக்ரமன் மற்றும் கூலிப்படையினரை போலீசார் கைது செய்தனர்.
திரு-பட்டினம் டிராவல்ஸ் அதிபர் அய்யப்பன், சாராய வியாபாரி ராமுவின் மனைவி வினோதா ஆகியோர் கொலையிலும் எழிலரசி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட் டார்.
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
இந்த வழக்குகளில் எழிலரசி மற்றும் விக்ரமன் ஆகியோர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து கொலைமிரட்டல், மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் ஊருக்குள் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த தடை காலம் முடிந்த நிலையில் மீண்டும் அவர்கள் காரைக்கால் மாவட்டத்திற்குள் நுழைய முடிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில் எழிலரசி நிரவியில் உள்ள ஒரு தொழில் அதிபருக்கு அண்மையில் கொலை மிரட்டல் விடுத்ததாக தகவல்கள் பரவியது. இதனால் அந்த தொழில் அதிபர் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஊருக்குள் நுழைய தடை
இதற்கிடையே அவர்கள் மீண்டும் ஊருக்குள் நுழைந்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.
எனவே, எழிலரசி மற்றும் விக்ரமன் ஆகியோர் காரைக்கால் மாவட்டத்தில் நுழைய மீண்டும் தடை விதிக்க வேண்டும் என நிரவி போலீசார் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி எழிலரசி, விக்ரமன் ஆகியோர் 144 சட்டத்தின் கீழ், காரைக்கால் மாவட்டத்துக்குள் மேலும் 2 மாதங்கள் நுழைய தடை விதித்து துணை கலெக்டர் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.