வடிகால் வாய்க்கால்களை தூர்வார விவசாய சங்கங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்
|காரைக்கால் மாவட்டத்தில் வடிகால் வாய்க்கால்களை தூர்வார விவசாய சங்கங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
காரைக்கால்
காரைக்கால் மாவட்டத்தில் வடிகால் வாய்க்கால்களை தூர்வார விவசாய சங்கங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட விவசாயிகள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
விவசாய சங்கங்கள்
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை, பொதுப்பணித்துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்திற்கு சொந்தமான வாய்க்கால்களையும், அந்தந்த பகுதியை சார்ந்த பாசனதாரர்கள் சங்கத்தின் மூலம் தூர்வாரிட நியமன முறையில் டெண்டர் கொடுக்கப்பட்டது. அதனால் அந்தந்த பகுதியில் உள்ள பாசனதாரர்கள் சங்கம் தேவையான ஆறு மற்றும் வாய்க்கால்களை முறையாக தூர்வாரி வந்தனர்.
இந்த நிலையில் கிரண்பெடி கவர்னராக இருந்தபோது, நியமன டெண்டர் முறையை ரத்து செய்து உத்தரவிட்டார். அந்த உத்தரவு தனி நபருக்கானது. எனினும் பாசனதாரர் சங்கத்திற்கும் நியமன முறை மூலம் கொடுக்கப்பட்ட டெண்டர்கள், ஆறு மற்றும் வாய்க்கால்களை தூர்வார அனுமதி அளிப்பதை நிறுத்திவிட்டனர். இதனால் டெண்டர் விட்டு தனியார் மூலம் வெட்டப்படும் ஆறு மற்றும் வாய்க்கால்கள், பல இடங்களில் முறையாக வெட்டப்படுவதில்லை. டெண்டர் எடுப்பவர் லாபம் கருதியே செயல்படுகிறார்கள். எனவே மீண்டும் அந்தந்த பகுதி விவசாய சங்கங்கள் மூலம் தூர்வாரிட நியமன டெண்டர் முறைகள் மூலம் மீண்டும் அனுமதி அளிக்க பொதுப்பணி துறைக்கு உத்தரவிட வேண்டும்.
நிவாரண நிதி வழங்கவேண்டும்
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட விவசாய கடன் தள்ளுபடியை செயல்படுத்த வேண்டும். காரைக்கால் பகுதிக்கு உரிய காவிரி நீர் கிடைக்காததால், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணமாக அளித்து விவசாயிகள் வாழ்வில் நலன் பெற ஆவண செய்ய வேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் மூடப்பட்ட பாசிக் நிறுவனத்தை மீண்டும் திறக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.