< Back
புதுச்சேரி
புதுவையில் கட்டுரை, பேச்சுப்போட்டி
புதுச்சேரி

புதுவையில் கட்டுரை, பேச்சுப்போட்டி

தினத்தந்தி
|
2 July 2022 5:30 PM GMT

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு புதுவையில் கட்டுரை, பேச்சுப்போட்டி நடந்தது.

புதுச்சேரி

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு புதுவையில் கட்டுரை, பேச்சுப்போட்டி நடந்தது.

காமராஜர் பிறந்த நாள் விழா

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் கல்வித்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மதுரையில் உள்ள நாடார் மகாஜன சங்கம் சார்பில், மாணவர்களுக்கு மாநில அளவிலான பேச்சு, கட்டுரை போட்டி நடத்தப்பட உள்ளது.

முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் மாவட்டந்தோறும் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுவையில் மாவட்ட அளவிலான போட்டி இன்று சித்தன்குடியில் உள்ள நாடார் உறவின்முறை சங்கத்திற்கு சொந்தமான டி.எஸ்.கே.அண்ணாமலை நாடார் திருமண அரங்கத்தில் நடந்தது.

விழாவிற்கு புதுச்சேரி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் பழனிவேல், துணைத் தலைவர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பட்டிமன்ற நடுவர் அவனிமாடசாமி, பேராசிரியர் ஈஸ்வரன், ரேடியோ சிட்டி தினேஷ் ராஜா, சக்தி ஆர். செல்வம், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பரிசுகள்

6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 'அறிவொளி தந்த காமராஜர்' அல்லது 'நான் காமராஜர் ஆனால்' என்ற தலைப்பிலும், 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஏன் வேண்டும் காமராஜர் ஆட்சி' அல்லது 'தன்னலம் கருதா தனிப்பெரும் தலைவர்' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு' நாடு காத்த நல்வேந்தன்' அல்லது 'காமராஜர் பாதையில் நடைபயில்வோம்' என்ற தலைப்பிலும் பேச்சுப்போட்டி நடந்தது.

கல்லூரி மாணவர்களுக்கு காமராஜரின் அரசியல் பணியும், ஆட்சிப்பணியும் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடந்தது. இந்த போட்டிகளில் புதுவையை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகள் வருகிற 14-ந் தேதி விருதுநகரில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கு பெறுவார்கள்.

மேலும் செய்திகள்