பணிக்கு தாமதமாக வரும் டாக்டர்கள்
|அபிஷேகப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கு தாமதமாக வரும் டாக்டர்களால் நோயாளிகள் அவதியடைகின்றனர்.
அரியாங்குப்பம்
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையின் கீழ் அபிஷேகப்பாக்கம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு அபிஷேகப்பாக்கம், டி.என்.பாளையம், தேடுவார்நத்தம் அதன் சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு டாக்டர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நேற்று அபிஷேகப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்கு அடிபட்டதால் சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாமல் அவதிப்பட்டார்.
இதேபோல் ஏராளமான முதியோர்களும் சிகிச்சை பெறுவதற்காக காத்திருந்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. இதுபோன்ற அவலநிலை ஏற்படாமல் இருக்க ஆஸ்பத்திரியில் எப்போதும் டாக்டர்கள், சுகாதார ஊழியர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.