டாக்டர்கள் தான் உண்மையான தியாகிகள்
|எத்தனையோ பிரச்சினைகளை சந்திக்கும் டாக்டர்கள் தான் உண்மையான தியாகிகள் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி
எத்தனையோ பிரச்சினைகளை சந்திக்கும் டாக்டர்கள் தான் உண்மையான தியாகிகள் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
டாக்டர்கள் கவுரவிப்பு
புதுவை அரசு ஆஸ்பத்திரியின் கருத்தரங்க அறையில் மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது. சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களை கவுரவித்தார். அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
மருத்துவராக இருப்பது சாதாரண காரியமல்ல. இது நமக்குத்தான் தெரியும். அதிலும் பெண்களுக்கு மிகவும் கஷ்டம். அதனால் தான் காலையில் அலுவலகத்துக்கு வரும் பெண்களுக்கு 2 மணிநேரம் வெள்ளிக்கிழமைகளில் விலக்கு கொடுத்தோம்.
சமீபத்தில் தெலுங்கானாவில் முதுகலை படிக்கும் ஒரு பெண் டாக்டர் தற்கொலை செய்துகொண்டார். அவரது சாவுக்கு பல காரணங்களை கூறினார்கள்.
300 மாணவர்கள் தற்கொலை
மருத்துவ உயர்கல்வி படிக்கும்போது அவர்கள் எவ்வளவு மன அழுத்தத்தில் உள்ளனர் என்பதை ஒரு டாக்டராக நான் புரிந்துகொண்டுள்ளேன். இதனால் சமீபத்தில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரிடம், மாணவர்களுக்கு என்னென்ன வசதி செய்து தர முடியுமோ அதை செய்து தாருங்கள் என்றேன்.
ஒரு வருடத்துக்கு சுமார் 300 மருத்துவ மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மன அழுத்தத்தால் இது நடக்கிறது என்று சாதாரணமாக கடந்துவிட முடியாது. மருத்துவ மாணவர்கள் சில நேரங்களில் தொடர்ச்சியாக 36 மணிநேரம் வரை பணியாற்றுகிறார்கள். அவர்களது பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு.
சவால்கள்
டாக்டர்கள் சம்பாதிக்கிறார்கள் என்ற தோற்றம்தான் வெளியே தெரிகிறது. அவர்கள் சந்திக்கும் சவால்கள் தெரிவதில்லை. அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் தைரியமாக வந்து சிகிச்சை பெற்று செல்லுவதுதான் சாதனை. அதுதான் வளர்ச்சி அடைந்த ஒரு மாநிலத்தின் அடையாளம். டாக்டர்கள் எத்தனையோ சவால்களையும், பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. வீட்டின் குழந்தைகளை கவனிக்க முடியாது. நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது.
உண்மையிலேயே தியாகிகள் என்றால் அது டாக்டர்கள்தான். நோயாளிகளுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் ஆத்திரத்தில் டாக்டர்களை தாக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். சில டாக்டர்கள் செய்கின்ற தவறுகளுக்கு எல்லா டாக்டர்கள் மீதும் குற்றச்சாட்டு விழுகிறது. டாக்டர்கள் சரியான நேரத்திற்கு வரவேண்டும். அங்கி (கோட்), பேட்ஜ் அணியவேண்டும். வெப்ப காலத்தில் கோட் அணிவதில் பிரச்சினை இருக்கிறது என்றார்கள்.
சீருடை
அதனால் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளில் உள்ளதுபோன்று சீருடை கொண்டுவர முடியுமா? என்று கருத்துகளை கேட்டு அதற்கேற்ப மாற்றங்கள் கொண்டுவரப்படும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை இங்கு தொடங்கவேண்டும். உயர் சிகிச்சைகள் அனைத்தும் இங்கு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் ஆனந்தலட்சுமி, அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காரைக்காலுக்கு செல்ல மறுப்பு
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறுகையில் 'புதுவை அரசில் ஒவ்வொரு துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். அரசு ஆஸ்பத்திரிகளில் அதிநவீன வசதிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவுகள் வர உள்ளது. ஆசிரியர்கள், சுகாதாரத்துறையினர் என சிலர் காரைக்காலுக்கு செல்ல மறுக்கிறார்கள். சில பிரச்சினைகளை சரிசெய்தால் மாற்றம் சிரமம் இல்லாமல் இருக்கும்.காரைக்கால் பகுதி மக்களுக்கும் நாம் சேவை செய்யவேண்டும். இடமாறுதல் விதிகளை மாற்றி அனைவரும் சந்தோசமாக இருக்க செய்தல் வேண்டும்' என்றார்.