< Back
புதுச்சேரி
தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
புதுச்சேரி

தி.மு.க.வினர் உண்ணாவிரதம்

தினத்தந்தி
|
20 Aug 2023 10:52 PM IST

புதுவையில் நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க.சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

புதுச்சேரி

தி.மு.க. சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 'நீட்' தேர்வைத் திணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும், தமிழக கவர்னரையும் கண்டித்து புதுச்சேரி சுதேசி மில் அருகே தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் ,இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.

உண்ணாவிரத போராட்டத்திற்கு தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் புதுவை மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், மருத்துவர் அணி ஆனந்த ஆரோக்கியராஜ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் சிவா எம்.எல்.ஏ. பேசுகையில், புதுச்சேரியில் 'நீட்' தேர்வு ஒழிக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை - எளிய மக்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும். இதனை மத்திய அரசு மறுத்து வருகிறது. நீட் விவகாரத்தில் ஆளும் கட்சியினர் பொய் பிரசாரம் செய்கிறார்கள்.அதில் தி.மு.க. அரசியல் செய்யவில்லை.

மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கடந்த ஆட்சியில் இயற்றப்பட்டது. ஆனால் ஆளும் கட்சியினர் புதிதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அனுப்பி ஒப்புதல் பெறுகிறேன் என மக்களை ஏமாற்றி வருகின்றனர். முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு 'நீட்' தேர்வு பற்றியும், 'மாநில அந்தஸ்து' பற்றியும் எந்த கவலையும் இல்லை. 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்