< Back
புதுச்சேரி
சட்டசபையில் இருந்து தி.மு.க.- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
புதுச்சேரி

சட்டசபையில் இருந்து தி.மு.க.- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

தினத்தந்தி
|
20 Sept 2023 10:37 PM IST

புதுவை சட்டசபையில் இருந்து தி.மு.க.-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

புதுச்சேரி

புதுவை சட்டசபையில் இருந்து தி.மு.க.-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

புதுவை சட்டசபை இன்று கூடியது. சபை நடவடிக்கையை தொடங்கி வைத்த சபாநாயகர் செல்வம் முதல்-அமைச்சர் ரங்கசாமியை முதலில் பேச அழைத்தார்.

ஒட்டு மொத்தமாக எழுந்தனர்

அப்போது சட்டமனற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாக.தியாகராஜன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் எம்.எல்.ஏ. ஆகியோர் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று பேசினார்கள். சட்டசபையை ஒருவாரம் நடத்த வேண்டும், மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

இருக்கையில் அமரும்படி அவர்களை சபாநாயகர் அறிவுறுத்தினார். ஆனால் தொடர்ந்து அவர்கள் பேசிக்கொண்டே இருந்தனர். இந்தநிலையில் மைக் இணைப்பு கொடுக்கப்படாததால் சட்டசபையில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-

தவறான தகவல்

சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. எனவே சட்டசபை கூட்டத்தை ஒரு வாரம் நடத்த கேட்டோம். டெங்கு பாதித்து 2 பேர் இறந்துள்ளனர். மாகியில் நிபா வைரஸ் தாக்குதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு, மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூல், தடை செய்யப்பட்ட மருந்துகளை தயாரிப்பது, மாநில அந்தஸ்து விவகாரம் குறித்து விவாதிக்க கேட்டோம். அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை 13 ஆயிரத்து 300 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு மாதம்தான் வழங்கப்பட்டது. ஆனால் 75 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுவதாக கவர்னர் தமிழகத்தில் போய் தவறான தகவலை சொல்கிறார். 16-வது நிதிக்குழுவில் புதுவை சேர்க்கப்படாவிட்டால் மிகப்பெரிய நிதி தட்டுப்பாட்டை உருவாக்கும். அதற்கு கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை.

ரவுடிகள் ராஜ்ஜியம்

நகரப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டம் என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் முறைகேடு நடக்கிறது. இதற்கு உயர் அதிகாரிகள் உறுதுணையாக உள்ளனர். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களே சட்டசபை வளாகத்தில் போராட்டம் நடத்தும் அளவுக்கு அரசின் செயல்பாடு உள்ளது. கோவில் அறங்காவலர் குழு போடுவதில் பிரச்சினை, காவல்துறையில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது.

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு முன்னுரிமை கொடுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க் கள் புறக்கணிக்கப்படுகின்றனர். ஜனநாயகம் சிதைக்கப்படுகிறது. அனைத்து அரசுத் துறைகளும் மிக மோசமான நிலையில் உள்ளது. இதையெல்லாம் விவாதிக்க அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தோம்.

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. கூறினார்.

காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

பா.ஜ.க. அலுவலகமான கவர்னர் மாளிகை

சட்டமன்றத்தில் நிறைய பிரச்சினைகளை விவாதிக்க வேண்டி உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெற சிவப்பு ரேஷன்கார்டு பெற்று 5 ஆண்டுகள் ஆகவேண்டும் என்று விதி உள்ளது.

அதை ஓராண்டாக மாற்ற வேண்டும். புதிய சட்டசபை கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை குறித்த கோப்பை சட்டசபையில் வைத்தால் உண்மை அனைவருக்கும் தெரியும்.

கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் சட்டசபைக்குள் நுழையக்கூடாது என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது பாகுபாடு பார்த்தது கிடையாது. ஆனால் இப்போது கவர்னர் மாளிகை பா.ஜ.க.வின் கட்சி அலுவலகமாக மாறிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுவை சட்டசபை கூட்டம் தொடங்கியதும் சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு எழுந்து பேசினார். ஆனால் அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டு, மைக் இணைப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. இதை கண்டித்து அவர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

புதுவை சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன் அங்கு வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் ஆகியோர் வருவாய்த்துறை சார்பில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என்று கூறி சட்டசபை வளாக படிக்கட்டில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்