புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
|தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
அரசிதழ் பதிவு பெறாதவர்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டது. அதாவது அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 908-ம் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,184-ம் வழங்கப்படும். இந்த போனஸ் தொகையானது யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அதே அளவிலான போனஸ் வழங்க புதுவை அரசு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த தீபாவளி போனசை அரசிதழ் பதிவு பெறாத அரசு ஊழியர்கள் சுமார் 18 ஆயிரம் பேர், தினக்கூலி ஊழியர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் பெறுகின்றனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.13 கோடி செலவாகும்.
தீபாவளி போனசை அரசு ஊழியர்களின் இம்மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கைகளில் நிதித்துறை தீவிரமாக இறங்கியுள்ளது.
சார்பு நிறுவனங்கள்
புதுவை அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு சார்பு நிறுவனங்களான வாரியங்கள், கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் போனஸ் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் அறிவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு சார்பு நிறுவனங்களின் நிதிநிலை காரணமாக கையில் பணம் கிடைப்பதில்லை. அதாவது, துறைகளை பொறுத்து கடந்த சில ஆண்டுகளாகவே போனஸ் என்பது அறிவிப்பாக மட்டுமே இருந்து வந்துள்ளது.
இதனால் அந்த நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். அதுபோல் இந்த ஆண்டும் இல்லாமல் போனஸ் அறிவிப்புடன் அந்த தொகையும் கிடைக்க வேண்டும் என தொழிலாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.